வதோதரா,
குஜராத்தில் படான் மாவட்டத்தில் சமி கிராமத்தில் சமி-ராதன்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை 11.30 மணியளவில் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ் மற்றும் பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் சிக்கி ஆட்டோவில் பயணித்த 6 பேர் பலியானார்கள்.
இதுபற்றி படான் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வி.கே. நயி கூறும்போது, அந்த பஸ் ஹிம்மத்நகரில் இருந்து புறப்பட்டு கச் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆட்டோ எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்தது என கூறியுள்ளார்.
இந்த விபத்தில் சிக்கியதில், ஆட்டோவை வெளியே எடுக்க முடியாத அளவுக்கு சேதமடைந்து இருந்தது. முன்னே சென்ற வண்டியை முந்தி செல்ல முயன்றபோது, அரசு பஸ்சின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து நேரிட்டு இருக்க கூடும் என நயி கூறியுள்ளார்.
ராதன்பூர் தொகுதிக்கான எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான லவிங்ஜி தாக்குர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று பார்வையிட்டார். ஆட்டோ ஓட்டுநர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர் என கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.