Anurag Kashyap: `சாதி இல்லை என்றால் நீங்களெல்லாம் யார்?’ – பூலே பட விவகாரத்தில் அனுராக் காட்டம்

அனுராக் கஷ்யப் பூலே திரைப்படத்துக்கு ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூகத்தினர் மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றைத் மையமாக எடுக்கப்பட்டத் திரைப்படம் பூலே.

Phule Movie

அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி மற்றும் பத்ரலேகா நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது பல்வேறு பிரச்னைகளால் ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பூலே படத்துக்கு திரைப்பட தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

‘மஹர்’, ‘மாங்’, ‘பேஷ்வாய்’ உள்ளிட்ட சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றும், “3000 ஆண்டுகள் அடிமைத்தனம்” என்பதை “எத்தனை ஆண்டுகள் அடிமைத்தனம்” என மாற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இயக்குநர் மகாதேவன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் அனுராஜ் கஷ்யப். அது ஒரு மோசடி அமைப்பு என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சாடியுள்ளார்.

“முழு அமைப்பும் மோசடியானது”

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

“பஞ்சாப் 95, டீஸ், தடக் 2, புலே – இன்னும் எத்தனை படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று எனக்குத் தெரியவில்லை… இந்த சாதிய, பிராந்தியவாத, இனவெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது.” எனக் கூறியுள்ளார். “அவர்களை எது தொந்தரவு செய்கிறது என்பதை வெளிப்படையாகக் கூட சொல்ல முடியாத கோழைகள்”. என்றவர்,

“திரைப்படத்தை எதிர்க்கும் குழுக்கள் எப்படி வெளியீட்டுக்கு முன்பே படத்தை அணுகுகின்றனர்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்தப் அமைப்புகளும் குழுக்களும் படத்தை வெளியிடுவதற்கு முன்பே, யாரும் அனுமதி வழங்காமல் எப்படிப் பார்க்கிறார்கள்? முழு அமைப்பும் மோசடியானது,” என எழுதியுள்ளார்.

“சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்?”

மற்றொரு பதிவில் சாதியை சுற்றியுள்ள முரண்பாடான கருத்துகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். “தாடக் 2 திரைப்படத்தின் தணிக்கையின்போது இந்தியாவில் சாதிய அமைப்பை மோடி ஜி ஒழித்துவிட்டார் என்று எங்களிடம் சொன்னார்கள்.

இங்கே சாதிய அமைப்பு இல்லை என்றால், ஏன் பிராமணர்கள் பூலே திரைப்படததின் மீது கோபம்கொள்கின்றனர்? சாதி இல்லை என்றால் நீங்கள் எல்லாம் யார்? ஏன் கோபத்தில் கொதிக்கிறீர்கள்?

சாதிய அமைப்பு இல்லை என்றால் எப்படி ஜோதிராவ் பூலே சாவித்ரிபாய் பூலே இன்னும் பேசுப் பொருளாக இருக்கிறார்கள், இந்தியாவில் சாதி உள்ளதா இல்லையா என்று முடிவு செய்யுங்கள். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல” என வெளிப்படையாக எழுதியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.