சென்னை: பழநி கோயில் நிதியில் ரூ.20 கோடி செலவிட்டு ஒட்டன்சத்திரத்தில் கல்லூரி கட்ட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் இருந்து தொப்பம்பட்டியில் கட்டப்பட்டுள்ள கல்லூரியை, ஒட்டன்சத்திரம் அருகே மாற்றி, பழநி கோயில் நிதியிலிருந்து ரூ.20 கோடிக்கு மேல் செலவிட்டு நிரந்தரக் கட்டிடம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்தும், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரியும் டி.ஆர்.ரமேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.செளந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜனிடம், “அரசுப் பணத்தில் கல்லூரி கட்டுவதாக இருந்தால் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், கோயில் நிதியில் இவ்வளவு பெரிய தொகையை எப்படி எடுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “தற்போது டெண்டர் மட்டுமே கோரப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது மனுதாரரான டி.ஆர். ரமேஷ், “தொப்பம்பட்டிக்குப் பதிலாக வேறு இடத்துக்கு கல்லூரியை மாற்ற அறநிலையத் துறைச் செயலருக்கு எந்த அதிகாரமும் இல்லை. உயர் கல்வித்துறைச் செயலர்தான் உத்தரவு பிறப்பிக்க முடியும். புதிதாக இடமாற்றம் செய்யப்படவுள்ள இடத்தில் அஸ்திவாரமே போட்டுவிட்டனர். தண்ணீர் பந்தல் தருமத்துக்காக வழங்கப்பட்ட நிலத்தை பழநி உபகோயில் என்று கூறி, புதிதாக கல்லூரியை கட்டி வருகின்றனர். இது சட்டவிரோதம்” என்றார்.
அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், “கல்லூரி தொடங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுப்படியே பழநி தொப்பம்பட்டி உள்ளிட்ட 4 இடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு நிரந்தரக் கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பணிகளுக்கு தடை விதிக்கக்கூடாது” என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று தெரிவித்து, விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.