Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் சீசனில் (IPL 2025) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 10வது இடத்தில் பரிதாபமான நிலையில் தவித்து வருகிறது. 8 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே, லக்னோவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியை பெற்றிருந்தது.
Chennai Super Kings: தொடரும் சிஎஸ்கேவின் தவறுகள்
ஆனால், நேற்று முன்தினம் (ஏப். 20) மும்பை அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து மீண்டும் தோல்வி வலையில் சிக்கியிருக்கிறது எனலாம். தோனி கேப்டன்ஸியை பெற்றாலும் கூட சிஎஸ்கே அதே மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. ஏலத்தில் தொடங்கிய தவறுகள் தற்போது களத்தில் தொடர்கிறது.
Chennai Super Kings: சிஎஸ்கேவுக்கு வாழ்வா? சாவா? நிலை
சிஎஸ்கே அணியில் (CSK) ருதுராஜ் கெய்க்வாட் இல்லாதது பெரியளவில் பிரச்னையை கொடுத்துள்ளது. இந்த முறை ஓபனிங்கும் சரியாக கிடைக்கவில்லை. இந்த சூழலில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என்றால் அடுத்து வரும் 6 போட்டிகளிலும் வெற்றிபெற்று, நெட் ரன்ரேட்டை சிறப்பாக வைக்க வேண்டும். இதை சிஎஸ்கே செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் பிளேயிங் லெவனை வலுவானதாக மாற்ற வேண்டும். வலுவான வீரர்களை சிஎஸ்கே பெற்றிருக்கும் நிலையில், வாழ்வா, சாவா போட்டியில் பெரிய மாற்றத்தை செய்தாக வேண்டும்.
Chennai Super Kings: சிஎஸ்கேவின் பலமான பேட்டிங் ஆர்டர்
ஓபனிங்கில் தைரியமாக ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரேவை பரிசோதித்து பார்க்கலாம். ரச்சின் ரவீந்திரா பெரியளவில் சோபிக்க தவறுகிறார். நம்பர் 3இல் டிவால்ட் பிரேவிஸை விளையாட வைக்கலாம். தொடர்ந்து, ஷிவம் தூபே நம்பர் 4இல் விளையாட வேண்டும். நம்பர் 5இல் வன்ஷ் பேடி அல்லது ராமசந்திரா கோஷ் ஆகியோரில் ஒருவரை முயற்சிக்கலாம், அவர்கள் மீது தற்போது நம்பிக்கையில்லாதபட்சத்தில் விஜய் சங்கரையே தொடரலாம்.
ஜடேஜா, தோனி, ஓவர்டன் ஆகியோர் இருக்க பேட்டிங் ஆர்டர் வலுவானதாக இருக்கும். டாப் ஆர்டரில் ஒருவர் நிச்சயம் முதல் 12 ஓவர்கள் வரை தாக்குபிடித்தாலே பெரிய ஸ்கோருக்குச் செல்லலாம். சிஎஸ்கேவின் ஃபினிஷிங் முன்பை விட தற்போது ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது. பவர்பிளேவில் அதிரடி காட்டுவதை தொடர்ந்து, மிடில் ஓவர்களில் மெதுவாக விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். எனவேதான், நம்பர் 4 – நம்பர் 5 வீரர்கள் சிக்ஸர்களை பறக்கவிடும் திறன்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
Chennai Super Kings: அஸ்வின் தேவையே இல்லை… ஆனால்
அஸ்வின் இந்த காம்பினேஷனுக்குத் தேவையே இல்லை. ஒருவேளை உங்களுக்கு அஸ்வின் தேவைப்பட்டால் நம்பர் 5இல் விஜய் சங்கரை முதல் பேட்டிங் செய்யும் பிளேயிங் லெவனில் வைக்க வேண்டாம். நம்பர் 5இல் தோனியோ, ஓவர்டனோ சூழலுக்கு தகுந்தது போல் இறங்கலாம்.
எனவே அஸ்வினை முதல் பிளேயிங் லெவனில் வைக்கலாம். நூர் அமகது, கலீல் அகமது, அன்ஷூல் கம்போஜ் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். தூபேவுக்கு பதில் பதிரானாவை எடுக்கலாம். அதாவது அஸ்வினை நீங்கள் ஆல்-ரவுண்டராக பார்த்தால் மட்டுமே அவர் விளையாட வைக்க வேண்டும். அவர் பந்துவீச்சுக்கு மட்டும் என்றால் அது தேவையில்லை. காரணம் அவரால் அன்ஷூல் கம்போஜின் இடம் பறிப்போவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்த இரண்டு போட்டிகளும் சிஎஸ்கேவுக்கு சேப்பாக்கத்தில்தான் இருக்கிறது என்பது ஒரு ஆறுதல். இந்த காம்பினேஷனில் சிஎஸ்கே அடுத்தடுத்து ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸை சேப்பாக்கத்தில் வீழ்த்திவிட்டால் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி வரும்.
CSK: சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் கணிப்பு
ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் தூபே, வன்ஷ் பேடி (அ) விஜய் சங்கர், ஓவர்டன், தோனி, ஜடேஜா, நூர் அமகது, கலீல் அகமது, அன்ஷூல் கம்போஜ். இம்பாக்ட் வீரர்: மதீஷா பதிரானா