கடந்த 2000-ம் ஆண்டு மார்ச்சில் அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர்.
மார்ச் 20-ம் தேதி மாலை, அனந்த்நாக் மாவட்டத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிட்டிசிங்போரா என்ற தொலைதூர கிராமத்துக்குள் இந்திய ராணுவ சீருடையில் தீவிரவாதிகள் நுழைந்தனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், கிராமவாசிகள் மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர். பலர் டிரான்சிஸ்டர் ரேடியோக்களில் அமெரிக்க அதிபரின் வருகை பற்றிய செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் உள்ளூர் குருத்வாராவில் மாலை பிரார்த்தனைக்கு பிறகு அப்போதுதான் திரும்பியிருந்தனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் வெவ்வேறு குழுக்களாக பிரிந்து, கோயில்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இருந்த சீக்கிய ஆண்களை சுற்றி வளைத்தனர். மொத்தம் 37 ஆண்களை மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 35 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இருவர் காயம் அடைந்தனர்.
காஷ்மீரின் பல ஆண்டு கால தீவிரவாத வரலாற்றில் சீக்கிய சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட முதல் பெரிய அளவிலான தாக்குதலாக இது அமைந்தது.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது 4 நாள் இந்தியப் பயணத்தை டெல்லியில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நிலையில் மறுநாள் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.