சென்னை,
10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் கவுரவமான இடத்தை பிடிக்கும்.
அதேவேளையில் பஞ்சாப் அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி, 1 முடிவில்லை என 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளும் முல்லன்பூரில் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு நாளை நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.