CSK: தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார்… ஹசி புகழாரம் – ஷாக்கில் ரசிகர்கள்

CSK vs PBKS: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஏப். 30) நடைபெறும் 49வது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே அணியின் பிளே ஆப் கனவு ஏறத்தாழ தகர்ந்துவிட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஓரிரு போட்டிகள் தேவை எனலாம்.

CSK vs PBKS: ‘அனைத்து போட்டிகளையும் வெல்வதே இலக்கு’

இந்நிலையில் போட்டிக்கு முந்தைய நாளான இன்று இரு அணிகளின் தரப்பிலும் செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதன் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கெல் ஹசி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். 

இதில் சிஎஸ்கேவின் மைக்கெல் ஹசி பேசுகையில், சிஎஸ்கே அணிக்கு அடுத்து வரும் அனைத்து போட்டிகளும் முக்கியம் என்றும் அனைத்து போட்டிகளையும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கிலேயே எதிர்கொள்வோம் என பேசியிருந்தார். அதற்கான அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் என பேசியிருந்தார். அணிக்கு விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்பதால் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார். இதனால், இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு சற்று வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது என்றார்.

CSK vs PBKS: ரச்சின், ஹூடாவுக்கு புகழாரம்

ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா ஆகியோரின் அணுகுமுறையை சிஎஸ்கே பாராட்டியிருந்தார். அவர்கள் பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக இடம்பெறவில்லை என்றாலும், அவர்களின் பேட்டிங் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து பயிற்சி ஈடுபடுவதாக தெரிவித்தார். அவர்கள் நினைத்திருந்தால் அணியில் இருந்து ஒதுங்கியிருக்கலாம் என்றும் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என்றும் ஹசி பாராட்டு தெரிவித்தார்.

ஹூடாவின் அணுகுமுறையால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், அவரிடத்தில் வேறொரு இளைஞருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அவர் சந்தோஷமே படுவார். கடந்த போட்டியில் ஹூடா ஒரு சிறப்பாக விளையாடினார். அது விளையாடுவதற்கு எளிதான சூழ்நிலை அல்ல. நான் அவரின் ஆட்டத்தால் மகிழ்ச்சி அடைந்தேன்” என்றார்.

CSK vs PBKS: கில்கிறிஸ்ட் போல் சூர்யவன்ஷி

தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சதம் குறித்து பேசிய அவர்,”அச்சமின்றி, மிரட்டலான இன்னிங்ஸை நேற்று பார்த்தோம். சில வீரர்களின் பேட்டிங்கை பார்க்க மிகுந்த ஆர்வமாக இருப்போம். ஆஸ்திரேலியாவில் ஆடம் கில்கிறிஸ்ட் விளையாட வரும்போது அப்படிதான் அனைவரும் வந்து அவர் விளையாடுவதை பார்ப்போம். நேற்று அவர் (சூர்யவன்ஷி) ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடிய போது, எனக்கு ஆடம் கில்கிறிஸ்ட்டின் ஆட்டத்தை பார்ப்பது போல் இருந்தது…” என புகழ்ந்து தள்ளினார்.

CSK vs PBKS: பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பலவீனம்

தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் பேசிய ஜேம்ஸ் ஹோப்ஸ், அந்த அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்தார். “டாப்-ஆர்டர் சிறப்பாகச் செயல்படும் போது, ​​வாய்ப்புகள் குறைவாக இருக்கும், இது மிடில் ஆர்டருக்கு மிகவும் கடினமானதாகிவிடும். கடந்த இரண்டு வாரங்களாக எங்கள் மிடில் ஆர்டர் அதிக பந்துகளை எதிர்கொள்ளவில்லை. சில போட்டிகளில் மழை குறுக்கிட்டது. அவர்கள் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் நன்றாக விளையாடுவார்கள், தேவைப்படும்போது அவர்கள் ஜொலிப்பார்கள்” என்றார். 

மேலும், சூர்யவன்ஷி குறித்து கூறுகையில்,”நேற்றிரவு என் கண்களை (தொலைக்காட்சியில் இருந்து) விலக்கவே கடினமாக இருந்தது. இந்த சிறுவர்கள் பொதுவாக வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் உலகின் கோலி மற்றும் தோனிகளை எதிர்கொண்டு மேலெழுந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. இந்திய கிரிக்கெட் அதுவும் குறிப்பாக வெள்ளை பந்து ஃபார்மட்டில் நல்ல நிலையில் உள்ளது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.