புதுடெல்லி: புதிய ஆராய்ச்சிகளில் நமது நாட்டு இளைஞர்கள் மைல்கற்களை எட்டி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று இளைஞர் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக நமது நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர். ஆராய்ச்சித்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும், ஆராய்ச்சிகளில் அவர் புதிய உயரத்தையும், மைல்கற்களையும் எட்டி வருகின்றனர். நாட்டின் இன்றைய இளைஞர்கள் திருப்புமுனை கண்டுபிடிப்புகளை முன்னெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. உயர்கல்வி தரவரிசையில் இந்தியா சமீபத்தில் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்வியில் இந்திய இளைஞர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நமது நாட்டு இளைஞர்கள் நிரூபித்துள்ளனர்.
நமது நாட்டைச் சேர்ந்த சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை வெளிநாடுகளில் தங்களது கல்வி மையத்தை திறக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் கல்வி பரிமாற்றம் மேம்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவுத்துறை (ஏஐ) வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்காக இந்தியா, ஏஐ திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஏஐ மேம்பாட்டுக்காக உயர்தர தரவு மற்றும் ஆராய்ச்சி வசதிகளைக் கொண்ட உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை இந்தியா அமைத்து வருகிறது. சிறந்த எதிர்கால தொழில்நுட்பத்தின் பட்டியலில் இந்தியாவை சேர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்
ஐஐடி கான்பூர் மற்றும் பம்பாயில், ஏஐ, இன்டலிஜென்ஸ் சிஸ்டம்ஸ் உள்ளிட்டவற்றுக்கான சூப்பர் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அடுத்த 25 ஆண்டுகளில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம் மிகக்குறைந்த காலக்கட்டத்தில் முடிக்கப்படவேண்டும்.
நமக்கு எதிரே இருக்கும் இலக்குகள் மிகப்பெரியவை. பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு, உற்பத்தி முடிந்தவுடன் சந்தைக்கு வருவதற்கு நீண்ட காலமாகிறது. ஆராய்ச்சி, உற்பத்திக்கான காலத்தை நாம் குறைத்தோம் என்றால் பொருட்கள் விரைவில் மக்களை சென்றடையும். இது ஆராய்ச்சியையும் ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.