MS Dhoni retirement : ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர் சிறப்பாக இல்லை. மிக மோசமாக விளையாடி தொடர் தோல்விகளையும் சந்தித்து ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவும் வாய்ப்பில்லை. அதேநேரத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்து இப்போது அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று இப்போது பிளே ஆப் சுற்றுக்கான ரேஸில் இருக்கிறது.
இதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் பார்முக்கு திரும்பிவிட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இல்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக இந்த தொடரின் பாதியில் இருந்து வெளியேறினார். இதனால் எம்எஸ் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சிஎஸ்கே வெற்றிப் பாதைக்கு திரும்பும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், அடுத்த சீசனுக்காக சிஎஸ்கே மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார். தோனி சிஎஸ்கே அணியை விட்டு வெளியேற வேண்டும். இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்றாலும், அவர் ஓய்வு பெற வேண்டிய நேரம் இது என்பதை அழுத்தம் திருத்தமாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
கில்கிறிஸ்ட் பேசும்போது “எம்எஸ் தோனி விளையாட்டில் யாருக்கும் நிரூபிக்க எதுவும் இல்லை. அவர் எல்லாவற்றையும் சாதித்துவிட்டார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை தோனி அறிவார், ஆனால் நான் சொல்கிறேன், எதிர்காலத்திற்காக தோனி சிஎஸ்கே அணியை விட்டு வெளியேற வேண்டும். அடுத்த ஆண்டு அவர் சிஎஸ்கே அணியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. நான் தோனியை நேசிக்கிறேன். எம்எஸ். நீங்கள் ஒரு சாம்பியன், ஒரு ஐகான், ஆனால் ஓய்வு பெற இதுவே சரியான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது சிஎஸ்கே குறைந்தபட்சம் இன்னும் ஒரு சீசனுக்கு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: வைபவ் சூரியவன்ஷி இல்லை! ஐபிஎல்லில் அதிவேக சதம் அடித்தது இவர் தான்!
மேலும் படிங்க: CSK: தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார்… ஹசி புகழாரம் – ஷாக்கில் ரசிகர்கள்