பெங்களூரு: கர்நாடகா மங்களூருவை சேர்ந்த பெண் மருத்துவர் நாட்டுக்கு எதிரான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி, அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் பணியாற்றிய தனியார் மருத்துவமனை அந்த மருத்துவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 34 வயதான பெண் மருத்துவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அண்மையில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பதிவிட்டு இருந்தார். அதில் மத்திய அரசையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தொடர்புப்படுத்தி எழுதி இருந்ததாக தெரிகிறது.
இதற்கு ஶ்ரீராம் சேனா, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்ததுடன், அவர் பணியாற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து மங்களூரு தெற்கு போலீஸார் அவர் மீது நாட்டுக்கு எதிரான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவர் பணியாற்றிய தனியார் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக அந்த பெண் மருத்துவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் அவரது சமூகவலைதள பதிவுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் தெரிவித்துள்ளது.