புதுடெல்லி,
குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில் உற்பத்தி செய்து வரும் பால் மற்றும் பால் பொருட்கள், இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமுல் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அமுல் பாலின் பல்வேறு வகையான பாக்கெட்டுகளும் இந்த விலை உயர்வுக்கு உட்படுகின்றன. இதன்படி, அமுல் முழு கிரீம் பால் விற்பனையானது, லிட்டர் ஒன்றுக்கு ரூ.65 என்பதில் இருந்து ரூ.67 என உயர்த்தி விற்கப்படும். டோன்டு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.53 என்பதில் இருந்து ரூ.55 ஆக உயர்த்தி விற்கப்படும்.
இதேபோன்று, அமுல் ஸ்டான்டர்டு, அமுல் கோல்டு, அமுல் சிலிம் அண்டு டிரிம் உள்ளிட்ட பல்வேறு வகையாக விற்கப்படும் பால் பாக்கெட்டுகளின் விலையும், லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது.
இந்த விலை உயர்வு மே 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. மதர் டெய்ரி நிறுவனம் பால் விலையை நேற்று உயர்த்தி அறிவித்த நிலையில், அமுல் பாலின் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது. பால் கொள்முதல் விலை அதிகரித்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என பால் விலை உயர்வு பற்றி மதர் டெய்ரி நிறுவனம் தெரிவித்தது. இந்த விலை உயர்வானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தது.