சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ததும், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 19.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து 191 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி, 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.
இதனால், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி, பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் பிளேஆப் சுற்றில் இருந்து வெளியேற கூடிய முதல் அணியாக சென்னை அணி உள்ளது. அந்த அணி 5 முறை சேப்பாக் மைதானத்தில் தொடர் தோல்வியை சந்தித்து உள்ளது.
2023-ம் ஆண்டில் இருந்து, கடைசியாக நடந்த 8 போட்டிகளில் 7 போட்டிகளில் பஞ்சாப் அணி, சென்னை அணியை வீழ்த்தி உள்ளது. இவற்றில் சேப்பாக் மைதானத்தில் 3 போட்டிகளில் சென்னை அணியை, பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஆண்டில், சேப்பாக் மைதானத்தில் சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி 5 முறை தோல்வியை சந்தித்து உள்ளது. ஒரு சீசனில் இது மிக அதிக தோல்வி ஆகும். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் (7 போட்டிகள்) 4 முறையும், 2012-ம் ஆண்டில் (10 போட்டிகள், இறுதி போட்டி உள்பட) 4 முறையும் இதே சேப்பாக் மைதானத்தில் சென்னை அணி தோல்வியடைந்து உள்ளது.
அடுத்தடுத்த சீசனில், ஐ.பி.எல். வரலாற்றில் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை அணி இழக்க உள்ளது, ரசிகர்கள் மத்தியில் வருத்தம் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நடந்து முடிந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.