சென்னை: காமராஜர் துறைமுகத்திலிருந்து எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக ரூ.197 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நிலக்கரி முனையம் 3-ல், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்லும் வகையில் கூடுதலாக 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் தமிழக மின்வாரியத்தின் மூலம் ரூ.197 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாட்டை மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு நிலக்கரி இறக்கும் இயந்திரமும் மணிக்கு 2,600 டன் நிலக்கரியை கப்பலிலிருந்து இறக்கும் திறன் கொண்டது. இந்த இயந்திரங்கள் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்துக்காக நிறுவப்பட்டிருந்தாலும், இதன் மூலமாக வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3-ன் பாய்லர்களுக்கும் நேரடியாக நிலக்கரியை கொண்டு செல்ல முடியும்.
மேலும், இந்த இயந்திரங்கள் மூலம் வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-1 மற்றும் 2-ன் நிலக்கரி கிடங்கு மற்றும் பாய்லர் கிடங்குகளுக்கும் நிலக்கரியை கொண்டு செல்வதற்கான சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை 24 மாதங்களில் நிறுவ திட்டமிட்டிருந்த நிலையில் 22 மாதங்களிலேயே பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இப்பணிகளில் ஈடுபட்ட மின்வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் ஜெ. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில், வடசென்னை அனல் மின்நிலையம் நிலை-2-ன் தலைமைப் பொறியாளர் என்.பி.சண்முக சேதுபதி, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலைய திட்டத்தின் தலைமை பொறியாளர் யு.வள்ளியம்மை மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.