புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரும் பொதுநல மனுவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சார்பில் வழக்கறிஞர் ஹதேஷ் குமார் சாஹு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுவுக்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். “இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தக் கோரி மனு தாக்கல் செய்ததன் மூலம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு கைகோர்த்துள்ள ஒரு முக்கியமான தருணம் இது. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் நமது படைகளின் மன உறுதியைக் குலைக்காதீர்கள்” என்று நீதிபதி என். கோடீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு கூறியது.
வழக்கறிஞர் ஹதேஷ் குமார் சாஹு, தனது நோக்கம் பாதுகாப்புப் படைகளின் மன உறுதியைக் குலைப்பதல்ல என்றும், மனுவைத் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும் என அவருக்கு அறிவுறுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள் எப்போதிலிருந்து வழக்குகளை விசாரிப்பதில் நிபுணர்களாக மாறினார்கள் என்று கேள்வி எழுப்பினர்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட உயர் நீதிமன்றத்தை அணுக அனுமதிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “இந்த மனுவை நீங்கள் வாபஸ் பெறுவது நல்லது. எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்குமாறு எங்களிடம் கேட்காதீர்கள்” என்று கூறினர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதுபோன்ற மனுக்கள் உயர் நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். மனுவை வாபஸ் பெற மனுதாரருக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், மாணவர்களின் பாதுகாப்பு அம்சத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுக அனுமதித்தது.