நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 30) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியே முதலில் பேட்டிங் செய்தது. மற்ற பேட்டர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சாம் கரன் மட்டும் களத்தில் நின்று ரன்களை குவித்தார். அவர் 47 பந்துகளில் 88 ரன்களை சேர்த்தார். இதனால் சாம் கரனை விக்கெட்டை பஞ்சாப் அணி வீழ்த்திய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இந்த அழுத்தம் காரணமாக ஓவர்களை வீச பஞ்சாப் அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ஃபீல்ட் செட் செய்வதற்கும் பவுலர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கும் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அதிக நேரம் எடுத்துக்கொண்டார். இதன் காரணமாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்தை செய்ததற்காக பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ ரூ. 12 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது. முதல்முறையாக பஞ்சாப் அணி இந்த தவறை செய்ததால், கேப்டன் ஸ்ரேயாஸுக்கு மட்டும் அபராதம் விதித்தது. ஒருவேளை இந்த தவறு தொடரும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ. 24 லட்சம் அபராதமும் அணியின் மற்ற வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 191 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதேசமயம் சென்னை தொடர்ந்து வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால், அதிகாரப்பூர்வமாக சென்னை அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. மீதமுள்ள 4 லீக் போட்டிகளை மட்டும் விளையாடி சென்னை அணி இத்தொடரை முடித்துக்கொள்ளும்.
மேலும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து இனி இவர் தான் – எம் எஸ் தோனி ஓபன் ஸ்டேட்மென்ட்
மேலும் படிங்க: ‘ஏதோ 200 ஸ்ட்ரைக் ரேட் வச்சிருக்க மாதிரி பேசுறீங்க’.. மஞ்சுரேக்கரை விளாசிய கோலி சகோதரர்!