இம்பால்: கடந்த 2023, மே 3ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முக்கிய பகுதிகளான இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்கோக்பி மாவட்டங்களின் தலைநகரங்களில் போலீஸார் தீவிர சோதனை மற்றும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் மக்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இம்பாலின் குமான் லம்பாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாநிலத்தில், அதிலும் குறிப்பாக சனிக்கிழமையன்று சமூக விரோதிகளால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
மைத்தேயி சமூக அமைப்பான, மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புத் குழு, மே 3-ம் தேதி அனைத்து வேலைகளையும் நிறுத்திவைத்து விட்டு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குகி மாணவர்கள் அமைப்பு மற்றும் சோமி மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியவை குகி இனமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மே 3-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இரண்டு மாணவர் அமைப்புகளும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 3ம் தேதி மாநிலத்தில் இனக்கலவரம் வெடித்து இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. அன்று மக்கள் அனைத்து கல்வி மற்றும் வணிக நிறுவனங்களையும் மூடி அமைதி காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. மேலும், அன்று மக்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மணிப்பூரில் குகி பழங்குடிகளுக்கும் மைத்தேயி மக்களுக்கும் இடையே மோதல் வெடித்து இனக்கலவரமாக மாறியது. இந்தக் கலவரத்தில் சுமார் 260-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடம்பெயர்ந்தனர்.