ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் தெரிவித்திருக்கிறார்.
பெப்சி அமைப்பு தொழிலாளர் தினத்தை (மே 1) நேற்று கொண்டாடி இருக்கின்றனர். இதில் நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான விஷால் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்வில் பேசிய விஷால், “ எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த தலைவர் ஆர்.கே செல்வமணி சார். (பெப்சி தலைவர்)
அவரிடம் உதவி இயக்குநராகப் பணிப்புரிய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் கனவில் கூட நினைக்கவில்லை இருவரும் ஒரு பொறுப்பில் வந்து சந்திப்போம் என்று. ஒரு சங்கம் நடத்துவதே கடினமாக இருக்கிறது என்றால் இவர் 24 சங்கங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால் இவருக்கு சிலையே வைக்க வேண்டும்.

எனக்கு மிகவும் ஒத்துழைப்புக் கொடுத்த பெப்சி தலைவர் என்றால் அது ஆர்.கே செல்வமணி சார். அடுத்த பெப்சி மீட்டிங் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடக்க வேண்டும். தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகள் 9 வருடங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட கஷ்டங்களைத் தாண்டி கட்டப்பட்டு விட்டது.
இன்னும் ஒரு 4 மாதங்களில் கட்டிட வேலை முடிந்துவிடும் என நான் நினைக்கிறேன். கட்டிடம் திறப்பு விழாவிற்கு அனைவரும் பட்டுபுடவையுடன், வேட்டி சட்டை அணிந்துகொண்டு வரவேண்டும். அனைவரையும் தனிப்பட்ட முறையில் நான் நிச்சயமாக அழைப்பேன்.
இப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடம் என்பது உங்களுக்கான கட்டிடம். இது நடிகர் சங்கம் கட்டடம் மட்டும் இல்லை. மொத்தமாக சினிமா உலகுக்காக கட்டப்பட்ட பெரிய கட்டிடம். எனவே, அனைவரும் வருகை தரவேண்டும். பெரியவர்கள் சிரித்த முகத்துடன் வர வேண்டும். வாசலில் நின்று கொண்டு இருப்பேன்.

கட்டடத்திற்கான திறப்பு விழாவை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். முதலில் கட்டடதிறப்பு விழா நடைபெறும். அதன்பிறகு தான் என்னுடைய திருமண விழா நடைபெறும். `கட்டட விழா நடந்து முடிந்தால் தான் என்னுடைய திருமணம் நடைபெறும்’ என தெரியாமல் வார்த்தையை விட்டுவிட்டேன். அதற்கு 9 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு வழியாக கட்டிடம் வந்துவிட்டது” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…