இந்தியா – பாக். பதற்றம் அதிகரிப்பு: பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் ஆலோசனை

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்தார். பிரதமரின் இல்லத்தில் சனிக்கிழமை (மே 3) நடந்த இந்தச் சந்திப்பில், ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் மோடி உடனான இந்தச் சந்திப்பில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாக தேசிய மாநாடு கட்சி எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதல் மக்களை கொதிப்படைய செய்துள்ளது என்றும், இது ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நேரம் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து ‘தடை’கள்: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்தியது, வாகா எல்லையை முடியது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்துள்ளது.

இது குறித்து, இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎப்டி) வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து வகையாக பொருட்களின் நேரடி அல்லது மறைமுக இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. குறிப்பாக, வழக்கமாக சுதந்திரமாக இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பிற விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் உட்பட அனைத்துக்கும் இது பொருந்தும்.

இந்தக் கட்டுப்பாடு இறக்குமதிக்கு மட்டுமல்ல, இந்தியா வழியாக செல்லும் பொருட்களுக்கும் பொருந்தும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கைய கருத்தில் கொண்டு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையிலிருந்து விலக்கு வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரைவழி, வான்வழி என எந்த விதத்திலும் பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்கள் ஊக்குவிக்கப்படாது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது.

பதற்றம் அதிகரிப்பு: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முடிவை எடுப்பதில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்து விட்டார் பிரதமர் மோடி. இதையடுத்து கடற்படை கப்பல்கள் அரபிக் கடல் பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. விமானப் படை விமானங்கள் நெடுஞ்சாலைகளை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, இந்திய கடற்படையின் ஊடக பிரிவு புதிய படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்ப்பல், துருவ ரக ஹெலிகாப்டர், ஸ்கார்பின் ரக நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஒன்றாக அணிவகுத்துள்ளன. கடற்படையின் மூன்று சக்திகள் என அந்தப் படத்துக்கு தலைப்பு கொடுக்கப்ப்டடுள்ளது. கடற்படை கப்பல்கள் எல்லாம் போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை வெளிப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ‘எக்சஸைஸ் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தான் சனிக்கிழமை ஏவுகணை சோதனை நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தில் அப்தலி என்ற ஏவுகணை ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து, தரைப்பகுதியை நோக்கி ஏவப்படும் இந்த ஏவுகணை 450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது. இந்த சோதனையை, அணு ஆயுதங்களை கையாளும் பாகிஸ்தானின் ராணுவப் பிரிவு மேற்கொண்டது. படைகளின் தயார் நிலையை உறுதி செய்யவும், நேவிகேஷன் போன்ற முக்கிய தொழில்நுட்ப அம்சங்களை சரிபார்க்கவும், சிந்து போர் பயிற்சியின் ஒரு பகுதியாகவும் இந்த சோதனையை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது கவனிக்கத்தக்கது.

இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அதிகாரிகள், “பாகிஸ்தானின் இந்த திட்டமிட்ட ஏவுகணை சோதனை பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயல். இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை வேண்டும் என்றே செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

அதேவேளையில், எல்லையில் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) முகாம்களில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.