புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்தது மற்றும் அவரது விசா காலாவதியான நிலையில், அது தெரிந்தே அவரை இந்தியாவில் தங்கவைத்தது போன்ற செயலால் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பணியில் நடத்தை மீறல் மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்டவை முனீர் அகமதுவின் பணிநீக்கத்துக்கு காரணம் என துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் அவர் பணியில் இருந்துள்ளார். அப்போது ஆன்லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த மினல் கான் என்ற பெண் அவருக்கு அறிமுகமாகி உள்ளார்.
நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவே கடந்த 2024 மே மாதம் அவர்களது திருமணம் முறைப்படி நடந்துள்ளது. இந்நிலையில், இந்திய விசாவுக்காக மினல் கான் நீண்ட நாள் காத்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் அவர் இந்தியா வந்துள்ளார். அவரது விசா மார்ச் 22-ம் தேதியோடு காலாவதியாகி உள்ளது. இருப்பினும் அவர் இந்தியாவில் இருந்துள்ளார். நீண்ட கால விசாவுக்கு மனு செய்துள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டதால், அட்டாரி – வாகா மினல் கான் தாயகம் திரும்ப இருந்த நிலையில் இந்தியாவில் 10 நாட்கள் வரை தங்க அவருக்கு கடந்த 29-ம் தேதி அன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை முனீர் அகமது மறைத்தது மற்றும் அவரை இந்தியாவில் தங்க அனுமதித்தது சிஆர்பிஎஃப் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பணி நடத்தை மீறலில் ஈடுபட்ட முனீர் அகமது உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.