கட்டாக்,
ஒடிசாவின் கட்டாக் நகரில் கதஜோடி ஆற்றின் மீது பாலம் ஒன்றை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பாலத்திற்கு தேவையான, பெரிய கான்கீரீட்டால் ஆன ஸ்லாப் ஒன்றை கிரேன் உதவியுடன் தூக்கியுள்ளனர். அப்போது, அது சரிந்து தொழிலாளர்கள் மற்றும் என்ஜினீயர் ஒருவர் மீது விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில், 3 பேர் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு எஸ்.சி.பி. மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி, மும்பைக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்-மந்திரி மோகன் சரண் மஜ்ஜி உத்தரவிட்டு உள்ளார். பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என வேண்டி கொண்டார்.
இந்த விபத்து பற்றி தலைமை என்ஜினீயர் தலைமையிலான தொழில்நுட்ப குழுவினர் விசாரணை செய்து, 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிஜு ஜனதா தள தலைவரான நவீன் பட்நாயக்கும் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.