பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இதன் காரணமாக பெங்களூரு அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இறுதியில் பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. ஆர்.சி.பி. தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62 ரன்கள் எடுத்தார்.
பெங்களூருவின் அதிரடி ஆட்டக்காரரான ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை ஆடி வருகிறது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் 19வது ஓவரை கலீல் அகமது வீசினார்.
அந்த ஓவரில் பெங்களூரு அணி 33 ரன்கள் குவித்தது. இந்நிலையில், ஒரே ஓவரில் 33 ரன் கொடுத்ததன் மூலம் சென்னை அணிக்காக கலீல் அகமது மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சென்னை வீரராக ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுகொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை கலீல் அகமது (33 ரன்) படைத்துள்ளார்.
சென்னை வீரராக ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுகொடுத்த வீரர்:
கலீல் அகமது – 33 ரன் (2025)
லுங்கி என்கிடி – 30 ரன் (2020)
டுவைன் பிராவோ – 29 ரன் (2019)