கொச்சி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.
இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ராமசந்திரன் என்பவரின் குடும்பத்தினரை கொச்சியில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று நேரில் சென்று சந்தித்து, சசி தரூர் எம்.பி. ஆறுதல் கூறினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த குடும்பத்தினர் கருணையுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர்.
இதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் செய்த விசயம், இந்தியா முழுமைக்கும் முக்கியம் வாய்ந்தது. நாம் யாராக இருக்க வேண்டும் என பயங்கரவாதிகள் முடிவு செய்ய நாம் விட்டு விட முடியாது. மத அடிப்படையில் நம்மை பிரிப்பதில் வெற்றியடைய விரும்புவதற்கு, பயங்கரவாதிகளை நாம் விட முடியாது.
நம் தேசத்திற்காகவும், தேசத்தின் வருங்காலத்திற்காகவும் நான் சிந்திக்கிறேன். பயங்கரவாதிகள் நம்மை மாற்றவோ, விருப்பம்போல் நம்மை உருவாக்கவோ அவர்களை நாம் விட முடியாது என்றும் கூறினார்.