பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவது என முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இதன்பின்பு சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் 17 வயதேயான ஆயுஷ் மாத்ரே குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இதன்படி, அவர் 8.5-வது ஓவரில் விளையாடியபோது, அரை சதம் (25 பந்துகளில்) எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அவருடைய முதல் அரை சதம் இதுவாகும். இதனால், இளம் வயதில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்தவர்களின் பட்டியலில் அவர் இடம் பெற்றுள்ளார்.
இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில், ராஜஸ்தான் அணியை சேர்ந்த வைபவ் சூரியவன்ஷி (14 வயது) குஜராத் அணிக்கு எதிராகவும், ராஜஸ்தான் அணியை சேர்ந்த ரியான் பராக் (17 வயது) டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராகவும், சென்னை அணியை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே (17 வயது) பெங்களூரு அணிக்கு எதிராகவும் அரை சதம் அடித்து அசத்தி உள்ளனர். இவர்கள் 18 வயதுக்குள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இதேபோன்று, ராஜஸ்தான் அணியை சேர்ந்த சஞ்சு சாம்சன் (18 வயது) பெங்களூரு அணிக்கு எதிராகவும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சேர்ந்த பிருத்வி ஷா (18 வயது) கொல்கத்தா அணிக்கு எதிராகவும் அரை சதம் எடுத்துள்ளனர்.
சென்னை அணியில் இடம் பெற்றிருந்த சுரேஷ் ரெய்னா (21 வயது) மும்பை அணிக்கு எதிராக 2008-ம் ஆண்டில் அரை சதம் அடித்து இந்த வரிசையில் இடம் பெற்று உள்ளார். சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் (48 பந்துகள் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) எடுத்திருந்த நிலையில், சிக்சர் அடிக்க முயன்றபோது, குருணால் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், அவருடைய சதம் அடிப்பதற்கான முயற்சி நிறைவேறாமல் போனது.