ஸ்ரீநகர்: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்ததாகக் கூறி சிஆர்பிஎஃப் வீரரான முனீர் அகமது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிஆர்பிஎஃப் தலைமையகத்தில் முறையான ஒப்புதல் பெற்றே தான் அப்பெண்ணை திருமணம் செய்ததாக முனீர் தற்போது தெரிவித்துள்ளார்.
“என்னை பணிநீக்கம் செய்துள்ளார்கள் என்பதை ஊடகம் மூலமாகவே அறிந்தேன். அதன் பின்பு தான் எனக்கு சிஆர்பிஎஃப் கடிதம் கிடைத்தது. அதில் நான் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது எனக்கும், எனது குடும்பத்துக்கும் அதிர்ச்சி அளித்தது. பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்வதற்கான அனுமதியை சிஆர்பிஎஃப் தலைமையகத்திடம் கேட்டுப் பெற்றேன்.
அப்போது என்னிடம் இதற்கு எந்தவித தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என அதிகாரிகள் கூறினர். இதற்காக எனது தரப்பில் அனைத்து விதமான ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். அனைத்தும் முறைப்படி இருப்பதாகக் கருதினேன்.
எனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண சான்று உள்ளிட்டவற்றையும் நான் சமர்ப்பித்துள்ளேன். 72-வது பட்டாலியனில் இருந்து 41-வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டேன். சட்ட அமைப்பு மூலம் எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என முனீர் கூறியுள்ளார்.
ஜம்முவை சேர்ந்த அவர் கடந்த 2017-ல் சிஆர்பிஎஃப் படையில் பணிக்கு சேர்ந்துள்ளார். ஆன்லைன் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த மினல் கான் என்ற பெண் அவருக்கு அறிமுகமாகி உள்ளார்.
நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆன்லைன் மூலமாகவே கடந்த 2024 மே மாதம் அவர்களது திருமணம் முறைப்படி நடந்துள்ளது. இந்நிலையில், இந்திய விசாவுக்காக மினல் கான் நீண்ட நாள் காத்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் அவர் இந்தியா வந்துள்ளார். அவரது விசா மார்ச் 22-ம் தேதியோடு காலாவதியாகி உள்ளது. இருப்பினும் அவர் இந்தியாவில் இருந்துள்ளார். மினல் நீண்ட கால விசாவுக்கு மனு செய்துள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டதால், அட்டாரி – வாகா வழியாக மினல் கான் தாயகம் திரும்ப இருந்த நிலையில் இந்தியாவில் 10 நாட்கள் வரை தங்க அவருக்கு கடந்த 29-ம் தேதி அன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்தது மற்றும் அவரை இந்தியாவில் தங்க அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்பட்டு பணியில் இருந்து முனீர் அகமதை சிஆர்பிஎஃப் நீக்கியுள்ளது.