வாஷிங்டன்: வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பிரச்சார பாணியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளி்யாகியுள்ளது. இந்த செயல்முறையை தொடங்க வர்த்தகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அவர் அங்கீகாரம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு சொந்தமான ‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
“அமெரிக்க திரைப்படத் துறை மிக வேகமாக அழிந்து வருகிறது. மற்ற நாடுகள் அதற்கான முயற்சியை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன. அது அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக இந்தப் படங்கள் பிரச்சார பாணியில் உள்ளன.
எங்களுக்கு வேண்டியதெல்லாம் மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். இந்தப் புதிய கட்டண முறை திரைப்படத் துறையில் நிலவும் போட்டியை சமன் செய்வதையும், அமெரிக்க தேசத்தில் உள்ள ஸ்டூடியோக்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அண்மையில் ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கையை தங்களது தேசத்தின் திரைப்பட சந்தையில் குறைக்கும் நடவடிக்கையை சீனா முன்னெடுத்தது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி காரணமாக இந்த நடைமுறையை சீனா கையில் எடுத்தது. இந்தச் சூழலில் ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு நூறு சதவித கட்டண வரி விதித்துள்ளார்.
இந்தக் கட்டண முறை ஹாலிவுட் சினிமா துறைக்கும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கரோனா தாக்கத்துக்கு பிறகான பாதிப்பில் இருந்து ஹாலிவுட் சினிமா முழுவதுமாக மீளாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டிஸ்னி, பாரமவுண்ட் மற்றும் வார்னர் பிரதர்ஸ் போன்ற முக்கிய ஸ்டூடியோக்கள் இதனால் பாதிக்கப்படும் என அமெரிக்க நாட்டின் முன்னணி ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. வரிச் சலுகைகள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவு குறைவு போன்ற காரணங்களால் வெளிநாடுகளில் திரைப்படங்கள் தயாராகின்றன என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.