இந்தியாவுடன் பதற்றம் நிலவும் சூழலில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று 2-வது முறையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி முப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கினர். இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த சூழலில், தரையிலிருந்து பாய்ந்து சென்று 450 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கும் திறன் வாயந்த ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது.
இந்நிலையில், 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்ததாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று தெரிவித்தது. 3 நாட்களில் நடந்த 2வது ஏவுகணை சோதனை இதுவாகும்.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “வீரர்களின் செயல்பாட்டு தயார்நிலையை உறுதி செய்யவும், ஏவுகணையின் மேம்பட்ட செயல்பாடு மற்றும் மேம்பட்ட துல்லியம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை சரிபார்க்கவும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக அமைந்தது” என கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணுவத்தின் தயார் நிலை முழு திருப்தி அளிப்பதாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பு வலுவான நிலையில் உள்ளது என்பதை இந்த வெற்றிகரமான ஏவுகணை சோதனை காட்டுகிறது” என கூறப்பட்டுள்ளது.