''மோதல் தவிர்க்கப்பட வேண்டும்'' – ஐநா பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள்

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராணுவ ரீதியாக பதிலடி கொடுப்பதற்கு ஏற்ப இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ளார். இதனால், பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணைக்குத் தயார் என ஏற்கனவே தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த விசாரணையில் இணைய சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து 2வது முறையாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், ஷெபாஸ் ஷெரீப் தொலைபேசி மூலம் பேசி உள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், “பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உடன் திங்களன்று தெற்காசியாவில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதித்தார்.

ஒரு வாரத்திற்குள் இரு தலைவர்களுக்கும் இடையேயான இரண்டாவது தொலைபேசி உரையாடல் இதுவாகும். ஐ.நா. பொதுச்செயலாளரின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் தொடர்பு முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் ஷெரீப், பதற்றத்தைத் தணிப்பதும், எந்தவொரு மோதலையும் தவிர்ப்பதும் அவசியம் என கூறினார்.

சுதந்திரமான, வெளிப்படையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணையை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில், இந்தியா இன்னும் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும், தொடர்ந்து ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் மற்றும் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

பாகிஸ்தான் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் உறுதியை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானின் பொருளாதார நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்வதேச நிதி நிறுவனங்களை அரசியலாக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் ஷெரீப் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தினார்.

தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தனது முயற்சிகள் குறித்து பிரதமரிடம், ஐநா பொதுச் செயலாளர் விளக்கினார். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.