சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் பிஏபி கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூரை சேர்ந்த ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு

புதுடெல்லி: சிங்கப்பூர் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் பிஏபி கட்சியில் ஆறு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவராக தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஹமீத் ரசாக்கும் தேர்வாகி உள்ளார்.

சிங்கப்பூரில் சீனர்கள், மலாயர்கள், இந்தியர்கள் என வெவ்வேறு இன மக்கள் உள்ளனர். சிங்கப்பூர் மக்கள் தொகை சுமார் 60 லட்சம் ஆகும். இதில் சீனர்கள் 76, மலேசியர்கள் 15 மற்றும் இந்தியர்கள் 7.4 சதவீதங்களில் உள்ளனர். மலேசியர்கள், இந்தியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கும் ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கில், சிங்கப்பூர் குழு பிரதிநித்துவ தொகுதி நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில், தமிழ் பின்புலம் கொண்ட 6 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர். மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் போட்டியிட்ட 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், கே.சண்முகம், விக்ரம் நாயர், இந்திராணி துரை ராஜா, முரளி பிள்ளை, ஹமீத் ரசாக், தினேஷ் வாசு தாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தினேஷ் வாசு தாஸ், ஹமீது ரசாக் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவர்களாக உள்ளனர். ஹமீது ரசாக், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வம்சாவளியை சேர்ந்தவர். ஒசைனா குடும்பத்தினர் என்றழைக்கப்பட்ட அவரது முன்னோர், கடையநல்லூரில் வாழ்ந்தனர்.

டாக்டர் ஹமீத் ரசாக் சிங்கப்பூரின் புகழ்பெற்ற எலும்பு அறுவைச் சிகிச்சை மருத்துவராவர். இவரது தந்தை ஒசைனா அப்துல் ரசாக் சிங்கப்பூரில் சுங்க இலாகா அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். டாக்டர்.ஹமீது ரசாக், பிஏபி கட்சி சார்பில் மேற்கு கடற்கரைப் பகுதியிலுள்ளபிரதிநிதித்துவத் தொகுதியான( Group Representation Constituency – GRC) ஜூரோங் மேற்கில், ஐந்து பேர் கொண்ட அணியில் ஹமீது போட்டியிட்டார்.

அவரது அணி பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றுள்ளது. சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் தனி உறுப்பினர் தொகுதி, குழு பிரதிநிதித்துவ தொகுதி இரண்டு வகையான தொகுதி நடைமுறையில் உள்ளன. தனி உறுப்பினர் தொகுதியில், கட்சி சார்பில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிடுவர். குழுத் தொகுதியில், கட்சி சார்பில் ஒரு அணியாக நான்கு அல்லது ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுவர்.

குழுத் தொகுதியில் வெற்றிபெரும் அணியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போது முடிந்த 2025 தேர்தலில் மொத்த தொகுதிகள் 97. இவற்றில், தனி உறுப்பினர்களுக்கானது 15, 8 தொகுதிகள் 4 பேர் கொண்ட குழுத் தொகுதிகள் மற்றும் 10 தொகுதிகள் 5 பேர் கொண்ட குழுத் தொகுதிகளாகவும் நிர்ணயிக்கப்பட்டன.

தேர்தல் முடிவுகளில், பிஏபி என்றழைக்கப்படும் ‘மக்கள் செயல் கட்சி’ மொத்தமுள்ள 97 இடங்களில் 87 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், மீண்டும் அமையும் பிஏபியின் ஆட்சியில் லாரன்ஸ் வோங் மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.