வாஷிங்டன்: பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கி வரும் நிலையில் அமெரிக்க சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தியா பல வழிகளில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான கூட்டாளி என்று நான் கருதுகிறேன். இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்க வேண்டும். அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் முடிந்த அனைத்தையும் செய்வோம். தீவிரவாதத்துக்கு எதிரான போரட்டத்துக்கு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் வளங்களை வழங்கும்.
ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா அமெரிக்கா உறவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. அதேபோல், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளது. அந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் போது அதற்கு எதிரான போராட்டத்துக்கு உதவ ட்ரம்ப் நிர்வாகம் அதில் அதிக கவனம் செலுத்தி அதற்காக அதிக வளங்களையும், நேரத்தையும் செலவழிக்கும் என்பது எனது நம்பிக்கை.” இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய மக்களுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எங்களின் முழு ஆதரவும், அனுதாபங்களும் உண்டு” என்று தெரிவித்திருந்தார்.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, “இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரிய தீர்வு காண அமெரிக்கா ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்” என அமெரிக்க அரசு துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.