இஸ்லாமாபாத்: எல்லைக்கட்டுப்பாடு கோட்டின் எந்த ஒரு இடத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா ஆசிப், “எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் எந்த இடத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தத் தாக்குதல் (பஹல்காம் தாக்குதல்) சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ஏற்கனவே கேட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் தாக்குதலில் இந்தியாவா வேறு ஏதாவது குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது வெளிப்படும். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா ஆதாரமற்று குற்றம் சாட்டுவதும் தெளிவாகும்.
ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் தொடர்ந்து அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறது. கைபர் பக்துகன்க்வா மற்றும் பாலுச்சிஸ்தான் பகுதிகளின் சமீபத்திய பயங்கரவாத அலைகள் இந்தியாவின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து இயக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு, தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக சிந்துநதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம், எல்லை மூடல், வர்த்தகம் நிறுத்தம், விசா ரத்து உள்ளிட்ட ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பாகிஸ்தானும் இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானங்களுக்கு வான்பரப்பை தடைசெய்தல், வர்த்த தடை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.