ராஞ்சி: பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அரசாங்கத்துடன் காங்கிரஸ் துணை நிற்கிறது என்று தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியைவிட நாடு உயர்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, மத்திய அரசை பல்வேறு விவகாரங்களுக்காக கடுமையாக விமர்சித்தார். அதேநேரத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, “கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இது ஓர் உளவுத்துறை தோல்வி என்றும், அதை சரிசெய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால், உளவுத்துறை போதுமான வலுவுடன் இல்லை என்பதை அறிந்திருந்தும் அரசு ஏன் முன்னேற்பாடுகளைச் செய்யத்தவறியது?
பயங்கரவாத தாக்குதல் குறித்த அச்சத்தை நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் அரசுக்குத் தெரிவித்திருந்தன. அதன் காரணமாகத்தான் பிரதமர் மோடி தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். எனது கேள்வி என்னவென்றால், பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உளவுத்துறை முன்கூட்டியே தெரிவித்த போதும் அரசு ஏன் உரிய எச்சரிக்கையை விடுக்கவில்லை?
பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான இந்தப் போராட்டத்தில் நாங்கள்(காங்கிரஸ்) முழுமையாக உறுதுணையாக இருக்கிறோம் என்று அரசாங்கத்திடம் கூறியுள்ளோம். பாகிஸ்தானுக்கு எதிராக அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுத்தாலும் நாங்கள் அவர்களுடன் நிற்போம். ஏனெனில், நாடு மிகப்பெரியது. அதற்குப் பிறகுதான் கட்சி, மதம், சாதி எல்லாம்.
நாட்டுக்காக உயிரைக் கொடுத்தவர்கள் நாங்கள். நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தியாகம் செய்துள்ளனர். மகாத்மா காந்தி நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தார், ஆனால் ஒரு துரோகி அவரை சுட்டுக்கொன்றார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் சாதி மத்திய அரசை வலியுறுத்தினர். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பு கோருபவர்கள் நாட்டைப் பிரிக்க விரும்புகிறார்கள் என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது அவரே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இது காங்கிரஸ் கட்சிக்கும், நமது தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. அதோடு, இது நரேந்திர மோடியின் தோல்வி. எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு பொதுமக்களுக்காகப் பாடுபட வேண்டும், பொது நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகப் போராட வேண்டும்.
அரசு பணியிடங்களில் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. ஆனால் அவை நிரப்பப்படவில்லை. ஏழை மக்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்பதால் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. நாடு பொருளாதார ரீதியாக வலுவடைந்து வருவதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் உண்மை என்னவென்றால், நாட்டின் ஏழைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வெறும் காகிதத்தில் புள்ளிவிவரங்களைக் காட்டுவது உதவாது.
நாட்டின் ஒற்றுமைக்காக, நேஷனல் ஹெரால்ட், குவாமி ஆவாஸ், நவ்ஜீவன் ஆகிய மூன்று பத்திரிகைகளை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இந்த பத்திரிகைகள் மக்களை சுதந்திரத்திற்காக விழித்தெழச் செய்வதற்காக வெளியிடப்பட்டன. இந்த செய்தித்தாள்களை உயிர்ப்புடன் வைத்திருக்க சோனியா காந்தி கடுமையாக உழைத்தார், ஆனால் இன்று பாஜகவினர் அவர் மீது அமலாக்கத்துறை மூலம் வழக்குத் தொடுக்கின்றனர்.
நாட்டின் சுதந்திரத்திற்காக பாஜகவினர் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை. ஆனால் இன்று அவர்கள்தான் நமது கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள். பாஜகவினர் என்ன செய்தாலும், நாங்கள் பயப்படவோ, தலைவணங்கவோ போவதில்லை” என தெரிவித்தார்.