Chennai Super Kings, IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு 18வது சீசன் மிகவும் அதிர்ஷ்டமில்லாத சீசனாகிவிட்டது. சேப்பாக்கம் முதல்கொண்டு எங்கு சென்றாலும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது சிஎஸ்கே.
11 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 2 வெற்றிகளையே பெற்றிருக்கிறது. கடைசி இடத்தில் தவித்துக்கொண்டிருக்கும் சிஎஸ்கேவுக்கு இன்னும் 3 லீக் போட்டிகளே உள்ளன. கேகேஆர், ராஜஸ்தான், குஜராத் என மூன்று அணிகளுடன் மோத இருக்கின்றன. இதுவரை சிஎஸ்கே (CSK) ஒரு சீசனில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடித்ததே இல்லை. இந்த சீசனிலும் அந்த கௌரவத்தை தக்கவைக்குமா என்பதே தற்போது சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Chennai Super Kings: சிஎஸ்கேவை துரத்தும் காயம்!
இது ஒருபுறம் இருக்க, சிஎஸ்கேவை இந்த வருடம் காயமும் துரத்தி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட் எலும்புமுறிவு, இளம் வீரர் குர்னப்ஜித் சிங் காயம், வன்ஷ் பேடியின் காயம் என சிஎஸ்கே முகாமில் காயங்கள் அதிகமாகின. ஆனால், இந்த காயங்களால் சிஎஸ்கேவுக்கு பெரிய நன்மைகளே ஏற்பட்டிருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா…
Chennai Super Kings: காயங்களால் சிஎஸ்கேவுக்கு நடந்த நன்மை
ருதுராஜ் கெய்க்வாட் இல்லாதது பேரிடிதான், ஆனால் அவர் இடத்தில் வந்துள்ள ஆயுஷ் மாத்ரே கடந்த சில போட்டிகளிலேயே அடுத்த 5 ஆண்டுகளுக்கான இடத்தை சிஎஸ்கேவில் பிடித்துவிட்டார் எனலாம். குர்னப்ஜித் சிங்கிற்கு பதில் வந்த டிவால்ட் பிரேவிஸ்தான் சிஎஸ்கேவின் எனர்ஜியையே அதிகமாக்கியிருக்கிறார். அவர் விளையாடுவதை பார்க்கவும் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
Chennai Super Kings: உள்ளே வந்த உர்வில் படேல்
அந்த வகையில், நேற்று வன்ஷ் பேடிக்கு பதில் உர்வில் படேலை சிஎஸ்கே மாற்று வீரராக அறிவித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் குஜராத் அணிக்கு விளையாடும் இவர் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 28 பந்துகளில் சதம் அடித்து, டி20இல் அதிகவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஓபனிங் வீரராக விளையாடி வருகிறார்.
Chennai Super Kings: அதிரடி ஓபனிங்கிற்கு வாய்ப்பு
எப்படி பஞ்சாப்பிற்கு பிரியான்ஷ் ஆர்யா – பிரப்சிம்ரன் சிங், ஹைதராபாத்திற்கு டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா போன்றோர் எப்படி அதிரடியான ஓபனிங்கை கொடுக்கிறார்களோ அதேபோல், ஆயுஷ் மாத்ரே உடன் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அளிக்க உர்வில் பட்டேலை அணியில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர் விக்கெட் கீப்பர் பேட்டர் என்பதால் தோனி ஒருவேளை ஓய்வுபெற்றாலும் சிஎஸ்கேவுக்கு பிரச்னையாக இருக்காது.
Chennai Super Kings: பிளேயிங் லெவனில் மாற்றம்
அந்த வகையில், நாளைய கேகேஆர் போட்டியிலேயே இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இந்த போட்டியில் தோனி விளையாடுவார் என்பதால் தீபக் ஹூடாவிற்கு பதில் உர்வில் படேலை முயற்சிக்க வாய்ப்புள்ளது. இதனால், ஷேக் ரஷீத் நம்பர் 3இல் விளையாட வாய்ப்புள்ளது. உர்வில் படேல் – ஆயுஷ் மாத்ரே ஓபனிங் வர வாய்ப்பிருக்கிறது. சாம் கரண் இன்னும் சற்று பின்னாடி இறக்க வாய்ப்பிருக்கிறது.