பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்ற விவரத்தை அம்மாகாண கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கைபர் பக்துன்வா மாகாண கல்வித் துறை, அம்மாகாணத்தின் பள்ளிக் கல்வியின் நிலை குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அம்மாகாணத்தின் அடிப்படைக் கல்வியின் நிலை குறித்த பல்வேறு தரவுகள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில், “கைபர் பக்துன்வாவில் 49.20 லட்சம் குழந்தைகள் அதாவது, 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.
காஷ்மீரை ஒட்டிய கோலாய்-பலாஸ் கோஹிஸ்தான் பகுதியில் 80,333 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். அண்டை மாவட்டங்களான லோயர் மற்றும் அப்பர் கோஹிஸ்தான் பகுதியிலும் அதிக அளவில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இப்பகுதியில் மட்டும் 79% குழந்தைகள் எந்த கல்வி நிறுவனத்திலும் சேரவில்லை. அதேநேரத்தில், மேல் சித்ரால் பகுதியில் அதிக அளவில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இங்கு பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் 10% மட்டுமே. மாகாண தலைநகரான பெஷாவரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. இதில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பெண் குழந்தைகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய கைபர் பக்துன்வா கல்வி அமைச்சர் பைசல் தாரகை, “தற்போது 48 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கல்வி முறையிலிருந்து வெளியேறிவிட்டனர். இருப்பினும், இந்தப் போக்கை மாற்றியமைக்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 13 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டுக்கான இலக்கு 23 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி கற்பதை எளிதாக்குவதற்கும், பள்ளி சேர்க்கையில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.
கடந்த ஜனவரியில், பாகிஸ்தான் கல்வி நிறுவனம் (PIE) வெளியிட்ட பாகிஸ்தான் கல்வி புள்ளிவிவர அறிக்கை 2021–22, நாடு முழுவதும் 2.62 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என தெரிவித்தது. இந்த எண்ணிக்கை பாகிஸ்தானின் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளில் 39% ஆகும். இருப்பினும் 2016–17ல் இது 44% ஆக இருந்ததாகவும், 2021–22ல் அது 39% ஆகக் குறைந்துள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில் மக்கள்தொகை வளர்ச்சி 2.20 கோடியில் இருந்து 2.62 கோடியாக அதிகரித்துள்ளது.
பள்ளிக் கல்வியில் பலுசிஸ்தான் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த மாகாணத்தில் 65% குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. நாடு முழுவதும் 1.07 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தானின் கல்வி வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு அந்நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒரு முக்கிய காரணி என கூறப்படுகிறது. இதனால், ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சதவீதம் 66 ஆகவும் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சதவீதம் 40 ஆகவும் உள்ளது.