IPL Matches After Operation Sindoor: கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், வெளிநாட்டினர் உள்பட சுமார் 26 சுற்றுலா பயணிகள் அவர்களின் குடும்பத்தினரின் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி
இந்த தாக்குதல் நடந்து சுமார் 15 நாள்களான நிலையில், இன்று (மே 7) நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது.
அதாவது, சுமார் 9 பயங்கரவாத முகாம்களின் மீது 25 நிமிடங்களில் 24 குண்டுகளை செலுத்தி நடத்திய இந்த தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகிறது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
Operation Sindoor: தொடரும் பதற்றம்
தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லைத் தாண்டிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்திவரும் பீரங்கி தாக்குதலில் சில இந்தியர்களும் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று நாடு முழுவதும் போர் கால பதற்ற ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று (மே 7) ஒத்திகை நடைபெற்றது. இவை ஒருபுறம் இருக்க, போர் பதற்ற சூழலிலும் இந்தியாவில் தற்போது ஐபிஎல் போட்டிகள் தினமும் நடைபெற்று வருகிறது.
Operation Sindoor: ஐபிஎல் தொடர் என்னவாகும்?
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. அந்த வகையில், ஐபிஎல் போட்டி அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிசிசிஐ தரப்பில் ANI செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அனைத்து ஐபிஎல் போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறும், மேலும், புற சூழலை பிசிசிஐ உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் பலமுறை இடையூறுகளை சந்தித்திருக்கிறது. தேர்தல் காலகட்டங்களிலும், கரோனா காலகட்டத்திலும் ஐபிஎல் தொடர் பிற நாடுகளில் நடத்தப்பட்டது. ஆனால், ஐபிஎல் தொடர் ஒருபோதும் முழுமையாக ரத்து செய்யப்பட்டதில்லை.
Operation Sindoor: தர்மசாலா போட்டிகளே பிரச்னை?
இன்னும் ஹிமாச்சல் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெறும் போட்டி அதிக பதற்றம் நிலவுகிறது. இருப்பினும் நாளை நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெரும் பாதிப்புகள் ஏதும் இருக்காது என்றும் தற்போதைக்கு தரம்சாலாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் மே 11ஆம் தேதி பஞ்சாப் – மும்பை அணிகள் அங்கு மோதுவது குறிப்பிடத்தக்கது.