“இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன்” – ட்ரம்ப்

வாஷிங்டன்: பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப் பழகுகிறேன். இரண்டு நாடுகளையும் நான் நன்கு அறிவேன். அவர்கள் பிரச்சினைகளை சரிசெய்துகொள்வதை, தாக்குதலை நிறுத்திக்கொள்வதை நான் பார்க்க விரும்புகிறேன்.

அவர்கள் பழிக்குப்பழி தாக்குதல்களை நடத்திவிட்டார்கள். எனவே அவர்கள் இப்போது நிறுத்த முடியும் என்று நம்புகிறேன். இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்குவதை நிறுத்திவிட்டு அமைதிக்காக பாடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தேவைப்பட்டால் தலையிட்டு உதவத் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியாவின் பதிலடி தாக்குதலை அடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்கு நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்.” என்று தெரிவித்திருந்தார்.

மீண்டும் பதிலடி கொடுக்க தயார்! இதனிடையே, பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை என்றும், பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோ, இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாதன் பவல், சவுதி அரேபியா பாதுகாப்பு ஆலோசகர் முசைத் அல் அய்பன், ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் மசாடாகா ஒகானா ஆகியோரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று போனில் பேசினார்.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கினார். அப்போது, “பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை எனவும், ஆனால், பாகிஸ்தான் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினால் மீ்ண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது.” என இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

70 பேர் பலி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முப்படைகளும் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தின. சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 70 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.