புதுடெல்லி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபை இன்று (மே 8) இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய ராணுவம். உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபைர் இன்று எந்தவொரு முன்னறிவிப்புமின்றி, இந்தியாவுக்கு வந்துள்ளார். டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் அவசர சந்திப்பை மேற்கொண்டார்.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில், “இன்று காலை சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல் ஜுபைர் உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியான இந்தியாவின் கண்ணோட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியை இன்று மாலை ஜெய்சங்கரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், பிற்பகலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் அவர் சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.