திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு எதிராகப் போரைத் தொடங்குவதில் இந்தியாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும், ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது, அதை செய்தோம். பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக இரவில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. நாம் ஒரு குறிப்பிட்ட அளவிலான பதிலடியை மட்டுமே கொடுத்தோம். இப்போது, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 59 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு நமது படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஆனால், அதை அதிகரிக்க நாம் விரும்பவில்லை.
பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசு அல்லது ராணுவம் இருப்பது நமக்கு தெரிந்திருந்தாலும், நாம் அவற்றைத் தாக்கவில்லை. இது நமக்கு போரில் ஆர்வம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் பாகிஸ்தான், நமது ராணுவம் அல்லது அரசாங்க கட்டமைப்புகள் அல்லது பொதுமக்களின் இருப்பிடங்களைத் தாக்கினால், நம்மிடம் எந்த பயங்கரவாத முகாம்களும் இல்லாததால், நாம் நிச்சயமாக வலுவான பதிலடியை கொடுப்போம். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நாம் அதைத் தொடங்க மாட்டோம். இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்னும் பின்னும் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், நாடு அதன் ஆயுதப் படைகளுடன் ஒன்றாக நிற்கிறது என்பதைக் காட்டுகிறது.
இந்து – முஸ்லிம் பகைமை என்ற வகுப்புவாத சதியை பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் முன்வைத்தார். அதை அகற்ற அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. நேற்று (மே 7) நடைபெற்ற அரசு தரப்பு செய்தியாளர் சந்திப்பில் ஒரு காஷ்மீர் பண்டிட் (வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி) ஒரு முஸ்லிம் அதிகாரியுடன் (கர்னல் சோபியா குரேஷி) ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கினார். இதுவரை நாம் அனைத்தையும் சரியாகவே செய்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூரின் தன்மை சரியாக இருந்தது” என்று சசி தரூர் தெரிவித்தார்.