+2 மாணவ, மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியானது. இதில் மாநில அளவில் மொத்தம் 4,05,472 (96.70%) மாணவிகளும், 3,47,670 (93.16%) மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
குறிப்பாக அரசுப் பள்ளிகளில் 91.94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மாவட்ட அளவில், அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 98.82 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி மாணவர்களுக்கு வாழ்த்துகளும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஊக்கமும் அளித்த முதல்வர் ஸ்டாலின், “பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.
தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்!” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இவ்வாறிருக்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வில் இரு கைகள் இன்றி 471 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர் கீர்த்திவர்மா, தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து உதவினால் நன்றாகப் படித்து தன்னைப் போன்று இருப்பவர்களுக்கு உதவ முடியும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்.
கண்ணீர் வேண்டாம் தம்பி!
மாண்புமிகு @Subramanian_ma அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன். https://t.co/uqKXnLmY8S
— M.K.Stalin (@mkstalin) May 8, 2025
கீர்த்திவர்மாவின் கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலானது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து, “கண்ணீர் வேண்டாம் தம்பி! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களிடம் உங்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்.” என்று மாணவர் கீர்த்திவர்மாவுக்கு உறுதியளித்திருக்கிறார்.