புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை புதுச்சேரியில் நடைமுறை படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வரும் 13-ம் தேதி சீராய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடாக இந்த கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான், காவல் துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங், ஜஜி அஜித் குமார் சிங்ளா, காவல்துறை சிறப்பு செயலர் கேசவன், சட்டத்துறைச் செயலர் சத்தியமூர்த்தி, டிஐஜிசத்திய சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். காரைக்கால் மஹே, ஏனாம் பகுதிகளை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் காணொளி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர். புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சவால்கள், சிரமங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
புதுச்சேரியில் புதிய குற்றவியல் சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்த கருத்துக்களை கேட்ட பின்பு துணைநிலை ஆளுநர் கூறுகையில், “சுமார் 200 ஆண்டுகால பழமையான நீதி பரிபாலன முறையை மேம்படுத்தும் வகையிலும், குடிமக்களுக்கான பாதுகாப்பு, விரைவாக நீதி கிடைப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையிலும் புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தப்படுத்தி உள்ளது.
அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். குடிமக்களுக்கான பாதுகாப்பு, தனி மனித உரிமை ஆகியவற்றை உறுதி படுத்த வேண்டும். புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த புரிதலை, விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சட்ட வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோரின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார்.