புதுடெல்லி: வியாழக்கிழமை இரவு இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு, பொருட் சேதம் ஏதும் இல்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளரின் எக்ஸ் தள கணக்கில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, பதன்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு சுமார் 8.20 மணி அளவில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் முயற்சியை நடத்தியது. எல்லை பகுதியில் இருந்து இந்த முயற்சி நடந்தது.
அந்த முயற்சியை நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு (SOP) ஏற்ப முறியடிக்கப்பட்டது. இதில் உயிரிழப்புகள் அல்லது பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தயார் நிலையில் உள்ளது என அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை பகுதிகளில் பதற்றம்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியை முன்னெடுத்தது. உதம்பூர், சத்வாரி, சம்பா, ஆர்எஸ்.புரா மற்றும் ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் தரப்பு குறிவைத்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சைரன் ஒலி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.