சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2.92 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள மீன் அங்காடிகளில் சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி, முக்கியமானது. மீன் அங்காடிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிந்தாதிரிப்பேட்டை, ஜோதியம்மாள் நகரில், சிங்கார சென்னை 2.0 திட்டம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 82 கடைகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடமானது புயலினால் சேதமடையாமல் இருக்கும் வகையில் டென்சைல் கட்டுமானத்துடன் கூடிய மேற்கூரை, மீன் கழிவுகளை வெளியேற்றும் வகையில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி, குப்பைகளை எளிதாக அகற்றுவதற்கான அமைப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், 10,555 லிட்டர் கொள்ளளவு கொண்ட பயோ டைஜஸ்ட் அமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாட்டு மையம்: அதேபோல் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.05 கோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதி ரூ.99 லட்சம் என மொத்தம் ரூ.2.04 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் தரை தளத்தில் 60 பேர் பயன்பெறும் வகையில் தையல், அழகுக்கலை பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படவுள்ளன.
முதல் தளத்தில் கணினி, டேலி பயிற்சி வகுப்புகள், இளைஞர்களுக்கான தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் புதிதாக கட்டப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடி மற்றும் திருவல்லிக்கேணி ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையக் கட்டிடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி என்.வி.என்.சோமு, மாநகராட்சி கூடுதல் ஆணையர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.