இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முரளி நாயக்(23) என்ற வீரர் வீர மரணம் அடைந்தார்.
முரளி நாயக் பெற்றோருக்குச் சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் உள்ளது. அவரது தந்தை ஸ்ரீராம் பிழைப்பு தேடிக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே மும்பைக்கு வந்து காட்கோபர் காமராஜ் நகரில் வசித்து வருகிறார்.
முரளி நாயக் வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தனது தந்தையிடம் வீடியோ காலில் பேசி இருந்தார். ஆனால் அதற்குள் பாகிஸ்தான் தாக்குதலில் இறந்துவிட்டார்.

முரளி தனது பெற்றோருக்கு ஒரே மகனாவார். அவர் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்திருந்தார்.
முரளியின் தந்தை ஸ்ரீராம் தனது மகனின் மரணம் குறித்துக் கூறுகையில், ”வியாழக்கிழமை காலை 8 மணிக்குத்தான் எங்களிடம் வீடியோ காலில் பேசினான்.
அப்போதுதான் வேலை முடிந்து வந்திருந்தான். சீருடையோடு எங்களிடம் பேசினான். மாலை 3 மணிக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்றான்.
அப்போதுதான் எங்களது மகனின் முகத்தை இறுதியாகப் பார்த்தோம். நாட்டைப் பாதுகாக்க எங்களது ஒரே மகன் வீரமரணம் அடைந்தது பெருமைதான். ஆனால் அவன் எங்களுக்கு ஒரே மகன்.
நாங்கள் கவலைப்படுவோம் என்று கருதி முரளி எங்களிடம் அவனது வேலை குறித்துத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. கடைசியாக மகர சங்கராந்தியையொட்டி மும்பைக்கு வந்து 15 நாள் எங்களுடன் தங்கிவிட்டுச் சென்றான்” என்று தெரிவித்தார்.
ஸ்ரீராம் கூலி வேலை செய்கிறார். அவரது மனைவி ஜோதி வீட்டு வேலை செய்து வருகிறார். முரளி ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தது குறித்துக் கேள்விப்பட்டதும் முரளியின் புகைப்படத்திற்கு காட்கோபர் காமராஜ் நகர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அக்னிவீர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட முதல் பிரிவில் முரளி தேர்வு செய்யப்பட்டார். முதலில் அஸ்ஸாம் மாநிலத்திலும், அதனைத் தொடர்ந்து ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றினார்.
கடைசியாக மீண்டும் ஜம்முவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். முரளி தனது நான்கு வயது வரை மும்பையிலிருந்தார். அதன் பிறகு ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊரில் சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்து வந்தார்.
தற்போது முரளியின் பெற்றோர் ஆந்திராவில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அங்கு முரளியின் உடல் வர இருக்கிறது. அங்குதான் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY