Dilip Vengsarkar Unbreakable Lords Record : கிரிக்கெட் என்று வந்துவிட்டால் அதுவும் பேட்டிங் சாதனை என்றால் நிச்சயமாக இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் கவாஸ்கர், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட் உள்ளிட்ட இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பெயர்கள் இருக்கும். ஆனால், இவர்கள் யாரும் செய்யாத மற்றும் தகர்க்க முடியாத ஒரு பேட்டிங் சாதனையை இந்திய முன்னாள் கிரிக்கெட் பிளேயர் பெயரில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய சாதனையை இன்னும் எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் முறியடிக்கவில்லை. அந்த அசைக்க முடியாத சாதனையை செய்திருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிளேயர் திலீப் வெங்சர்க்கார். 1983 முதல் 1987 வரை, திலீப் வெங்சர்க்கார் தனது பேட்டிங் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்தார்.
திலீப் வெங்சர்க்கார் சாதனை
இவர் செய்திருக்கும் சாதனை மகத்தானது. அதுவும் இந்திய மைதானங்களில் பேட்டிங் ரெக்கார்டு செய்யவில்லை, கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் அந்த மகத்தான சாதனையை செய்திருக்கிறார். ஆம், லார்ட்ஸ் மைதானத்தில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அடித்த முதல் ஆங்கிலேயர் அல்லாத மற்றும் இந்திய பேட்ஸ்மேன் என்ற மிகப்பெரிய பெருமை திலீப் வெங்சர்க்கார் வசமே இன்றளவும் உள்ளது. சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்ற இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களால் கூட இந்த சாதனையை செய்யமுடியவில்லை. திலீப் வெங்சர்க்கார் 1979 ஆம் ஆண்டு லார்ட்ஸில் இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 0 மற்றும் 103 ரன்களையும், 1982 ஆம் ஆண்டு நடந்த டெஸ்டில் 2 மற்றும் 157 ரன்களையும், 1986-ல் ஆட்டமிழக்காமல் 126 மற்றும் 33 ரன்களையும் எடுத்தார்.
சச்சின்-கோலி-கவாஸ்கர் செய்யவில்லை
திலீப் வெங்சர்க்கார் லார்ட்ஸ் மைதானத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 72.57 சராசரியாக 508 ரன்கள் எடுத்தார். திலீப் கடைசியாக 1990 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடினார். ஆனால் அப்போது சதம் அடிக்கவில்லை. அவர் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 52 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களும் எடுத்தார். இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. திலீப் வெங்சர்க்கார் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை 1975-76ல் நியூசிலாந்திற்கு எதிராகத் தொடங்கினார். அவர் இந்தியாவுக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அணியில் திலீப் வெங்சர்க்காரும் இருந்தார்.
கேப்டன் பதவியில் இருந்து நீக்கம்
1985 மற்றும் 1987 -க்கு இடையில், திலீப் வெங்சர்க்கார் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி நிறைய ரன்கள் எடுத்தார். இந்தக் காலகட்டத்தில், திலீப் வெங்சர்க்கார் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்து சதங்களையும் அடித்தார். 1987 உலகக் கோப்பைக்குப் பிறகு, கபில் தேவ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் திலீப் வெங்சர்க்கார் அணித் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் தனது கேப்டன்சியை இரண்டு சதங்களுடன் தொடங்கினார், ஆனால் திலீப் வெங்சர்க்கார் கேப்டன்சி பொறுப்பில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், 1989 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
திலீப் வெங்சர்க்கார் சாதனை
திலீப் வெங்சர்க்கார் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். வெங்சர்க்கார் தனது கடைசி சர்வதேச போட்டியில் 1992 ஆம் ஆண்டு பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். அதில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவரால் 10 ரன்களைக் கூட தாண்ட முடியவில்லை. வெங்சர்க்கார் இந்திய அணிக்காக 116 டெஸ்ட் மற்றும் 129 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். வெங்சர்க்கார் 116 டெஸ்ட் போட்டிகளில் 42.13 சராசரியுடன் 6868 ரன்கள் எடுத்தார், இதில் 17 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் அடங்கும். வெங்சர்க்கார் 129 ஒருநாள் போட்டிகளில் 34.73 சராசரியில் 3508 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் அடித்துள்ளார். வெங்சர்க்கார் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் ராஜபூரில் பிறந்தார். 70களின் பிற்பகுதியிலும் 80களின் முற்பகுதியிலும் இந்திய அணிக்காக அவர் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார்.