ஸ்ரீநகர்: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம் கேட்பதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “இப்போது போர் நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுக்க வெடிகுண்டுச் சத்தம் கேட்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை போர் நிறுத்தம் குறித்த இருதரப்பு ஒப்புதல் அறிவிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திலேயே ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், சம்பா, கத்துவா, அகநூர், உதம்பூர், நவ்சேரா பகுதிகளில் போர் நிறுத்தத்தை அத்துமீறும் வகையில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சுகளை இந்திய பாதுகாப்பு படை இடைமறித்து அழித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதாகவும், ராஜஸ்தானில் எல்லையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
What the hell just happened to the ceasefire? Explosions heard across Srinagar!!!
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
அதன்பின் மற்றொரு பதிவில் வீடியோவுடன், “ஸ்ரீநகரை குறிவைத்து வான்வழித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது. இது போர் நிறுத்தம் இல்லை” என்று முதல்வர் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
This is no ceasefire. The air defence units in the middle of Srinagar just opened up. pic.twitter.com/HjRh2V3iNW
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
போர் நிறுத்தம்: முன்னதாக, இந்தியாவும் பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் இன்று (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், வான், கடல் என அனைத்து வகையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் இந்தியா – பாகிஸ்தான் இரு தரப்பினரும் நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12-ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்” என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்பாகவே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது எக்ஸ் பதிவில், “அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. இரு நாடுகளும் புத்திசாலித்தனமான முடிவை எட்டியதற்கு வாழ்த்துகள். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியமைக்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 எல்லை மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 400-க்கும் மேற்பட்ட துருக்கி தயாரிப்பு ட்ரோன்களை ‘சுதர்சன சக்கரம்’ (எஸ்-400) உள்ளிட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களால் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன் பின்னரும், பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களும், இந்தியாவின் பதிலடி தாக்குதல்களும் நீடித்துக் கொண்டிருந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடத்திய சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 7-ம் தேதி முதல் நடந்து வந்த மோதல் 4 நாட்களில் முடிவுக்கு வந்தாக கருதப்பட்ட சூழலில், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக உறுதியான தகவல்கள் கூறுவது கவனிக்கத்தக்கது.