மும்பை,
விராட் கோலிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதனிடையே யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஓய்வு முடிவை அறிவித்தார்.
எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரை ரோகித் கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர் ஓய்வை அறிவித்தது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டிற்கு சிறப்பாக சேவை செய்த கேப்டனுக்கு, சமூக ஊடக பதிவுகள் மூலம் அல்லாமல், களத்தில்தான் சரியான பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவர் களத்தில் ஓய்வு பெற தகுதியானவர் என்றும் இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரோகித் சர்மா சமூக ஊடகங்களில் விளையாடாமல், மைதானத்திலேயே ஓய்வு பெற்றிருந்தால், அது மிகவும் பொருத்தமான பிரியாவிடையாக இருந்திருக்கும். அது நம் அனைவருக்கும் சிறப்பாக இருந்திருக்கும். டெஸ்ட் கேப்டனாக அவரது சாதனையைப் பாருங்கள், அது மிகவும் சிறப்பாக உள்ளது.
அவர் 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார், 9 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார், 3 போட்டிகளில் டிரா செய்துள்ளார். எனவே, அவரது வெற்றி விகிதம் குறித்து எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.