புதுடெல்லி,
புத்தரின் பிறந்தநாளான இன்று புத்த பூர்ணிமாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமாவையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இருவரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு;
ஜனாதிபதி திரவுபதி முர்மு;
“புத்த பூர்ணிமாவின் புனிதமான நாளில், உலகெங்கிலும் உள்ள அனைத்து சக குடிமக்களுக்கும் பகவான் புத்தரின் சீடர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். பகவான் புத்தரால் அருளப்பட்ட அஹிம்சை, அன்பு மற்றும் கருணை ஆகியவற்றின் அழியாத செய்தி, இரக்கத்தின் உருவகம், மனிதகுலத்தின் நலனுக்கான அடிப்படை மந்திரமாகும்.
அவரது இலட்சியங்கள் சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியின் நித்திய மதிப்புகளில் நமது நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. அவரது போதனைகள் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை வாழ நம்மை ஊக்குவிக்கின்றன. பகவான் புத்தரின் கொள்கைகளை நம் வாழ்வில் ஏற்றுக்கொண்டு, அமைதியான, இணக்கமான மற்றும் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதில் பங்களிப்போம்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி;
“நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்த பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். உண்மை, சமத்துவம் மற்றும் நல்லிணக்கக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட பகவான் புத்தரின் வாழ்க்கை மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றன.
தியாகம் மற்றும் தவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை, உலக சமூகத்தை எப்போதும் அமைதியை நோக்கி பயணிக்க ஊக்குவிக்கும்.”
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.