புதுடெல்லி: உண்மையான அதிகாரமளித்தல் என்பது இலவசங்கள், நன்கொடைகள் மூலம் நிகழாது என்றும், போதுமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மூலம் அவர்கள் தாங்களாகவே அதிகாரம் பெறுவதே உண்மையான அதிகாரம் அளித்தலாக இருக்கும் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் காரோ ஹில்ஸ், காசி ஹில்ஸ், ஜெயின்டியா ஹில்ஸ் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மேகாலயாவின் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களிடம் உரையாற்றிய ஜெகதீப் தன்கர், “நமது நாட்டின் வடகிழக்கு பிராந்தியமானது சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கமாகத் திகழ்கிறது. குறிப்பாக மேகாலயா, சுற்றுலா, சுரங்கம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் மேகாலயா சாதனைகளைப் படைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த பத்தாண்டுகளில் ஏராளமான நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் உலகமே பொறாமைப்படும் மைல்கற்களை அடைய அதிகாரிகள் சரியான திசையில் செயல்படுவதற்கு ஊக்குவிக்கும் தொலைநோக்கு தலைமை இது.
இலவசங்கள், நன்கொடைகள் மூலம் ஒரு நபருக்கு அதிகாரமளிப்பது உண்மையான அதிகாரமளித்தல் அல்ல. போதுமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் மூலம் அவர்கள் தாங்களாகவே அதிகாரம் பெறுவதே உண்மையான அதிகாரம் அளித்தல் ஆகும்” என தெரிவித்தார். மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளிட்ட பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.