விராட் கோலி, ரோஹித் சர்மா சம்பளம் ஓய்வுக்கு பின் குறையுமா…?

India National Cricket Team: இந்திய கிரிக்கெட் சமூகத்திற்கு கடந்த வாரம் என்பது மிகவும் துயரமான, வருந்தத்தக்க வாரம் என்றே கூறலாம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சம்பெற்ற இந்திய நட்சத்திரமான விராட் கோலியும் ஓய்வை (Virat Kohli Retirement) அறிவித்தது இந்திய கிரிக்கெட் மனதில் வலியை ஏற்படுத்தியிருக்கிறது. 

ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் மூலம் அறிவித்த அடுத்த 5 நாள்களில் விராட் கோலியும் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது ஓய்வை அறிவித்தார் எனலாம். ஆனால் இருவருமே ஓடிஐ கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்பது தெரிகிறது. 

அதே நேரத்தில், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கலாம். 2023இல் கைக்கு வந்த கோப்பை ஜஸ்ட் மிஸ்ஸில் தவறிய நிலையில் அதை 2027இல் எட்டிவிட இருவரும் திட்டமிட்டிருப்பார்கள். மேலும், ரோஹித், விராட் இருவரும் ஏற்கெனவே 2023 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, டி20ஐ அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில் இனி சர்வதேச அளவில் ஓடிஐ போட்டிகளில் மட்டுமே இருவரையும் பார்க்க முடியும். இருவரும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் எனலாம். 

இந்தச் சூழலில், இந்திய அணியில் டி20ஐ, டெஸ்ட் என 2 பார்மட்களில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஓடிஐ மட்டுமே உள்ளது. அதுவும் ஓராண்டுக்கு டி20ஐ போட்டிகளை ஒப்பிடும்போது குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கும். அந்த விதத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ வழங்கி வரும் சம்பளம் குறைக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 

ஆனால், பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் A+ பிரிவில் இருக்கும் ரோஹித், விராட் இருவரும் ஓய்வுக்கு பின்னரும் இதே பட்டியலிலேயே நீடிப்பார்கள் என தெரிகிறது. இந்த ஒப்பந்தம் கடந்த 2024 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 30ஆம் தேதிவரை இருக்கிறது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், “விராட் மற்றும் ரோஹித் இந்தியாவுக்காக விளையாடுகிறார்களே, பிறகு அவர்களை A+ பிரிவில் ஏன் சேர்க்காமல் விடப்போகிறோம்…? இருவரும் அதே பிரிவில் தொடருவார்கள், அந்த பிரிவின் அனைத்து வசதிகளையும் பெறுவார்கள்” என்றார்.

A+ பிரிவில் விராட், ரோஹித் மட்டுமின்றி ஜடேஜா, பும்ரா ஆகியோரும் உள்ளனர். இந்த பிரிவில் இருப்பவர்களே பிசிசிஐயின் ஒப்பந்ததில் அதிக சம்பளம் மற்றும் உயர் வசதிகளை பெறுபவர்கள். இவருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.7 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. 

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின்னர் இந்திய அணி அடுத்து வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கு (ENG vs IND Test Series) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இத்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் அதற்கு முன்னரே இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுவிடும் எனலாம். மேலும், வரும் மே 20ஆம் தேதிக்குள் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய ஸ்குவாட் அறிவிக்கப்படலாம். விராட் கோலி இடத்தை பிடிக்கப்போகும் வீரர் யார், இந்திய அணியின் கேப்டன் யார் என்பதை அப்போது தெரிந்துகொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.