பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை.
தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளார். இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்களின் பட்டியலை பாகிஸ்தானிடம் வழங்கி உள்ளோம். அந்த தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை மூட வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இதுகுறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்