புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்தங்களுக்கான இடைக்காலத் தடை குறித்த வாதங்களைக் கேட்க தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு மே 20-ம் தேதி முழுவதையும் ஒதுக்கியுள்ளது.
வக்பு திருத்தச் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள வாதங்களைக் கேட்க, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மே 20-ம் தேதி ஒரு முழு நாளையும் ஒதுக்க முடிவு செய்துள்ளது.
வழக்கு ஒத்திவைக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, வழக்கறிஞர்கள் தங்கள் ஆவணங்கள் மற்றும் சட்டப் புள்ளி விவரங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்கத் தயாராக வருமாறு தலைமை நீதிபதி கவாய் கேட்டுக் கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், “செவ்வாய்கிழமை (மே 20, 2025) வேறு எந்த விஷயத்தையும் நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்.” என்று வழக்கறிஞர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பதவியேற்ற நிலையில், வக்பு சட்டம் குறித்த வழக்கு முதல் முறையாக அவரது அமர்வு முன்வந்தது.
அப்போது, அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும், விசாரணையின் தொடக்கத்தில் வழக்கை அடுத்த வாரத்துக்கு திட்டமிடவும், வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ய அமர்வுக்கு போதுமான நேரம் வழங்கவும் பரிந்துரைத்தனர்.
இந்த வழக்கு கடைசியாக மே 5 அன்று தலைமை நீதிபதி கவாய்க்கு முந்தைய தலைமை நீதிபதியான சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கன்னா வழக்கை தொடர்ந்து விசாரிக்க தயக்கம் தெரிவித்தார். அவர், மே 13 அன்று ஓய்வு பெறும் வரை தனக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது என்று கூறி வழக்கை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கை மே 5-ம் தேதிக்கு முன்னர், நீதிபதிகள் கன்னா, சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.